Monday, October 10, 2011

உடல்சோர்வை நீக்கும் நீர்முள்ளி

நீர் நிலைகளில் காணப்படும் மூலிகைகளின் மருத்துவப் பயன்கள் அளப்பரியது. இவற்றில் நீர்முள்ளி என்று அழைக்கப்படும் மூலிகை அதிக மருத்துவக் குணம் கொண்டது. இந்தியா முழுவதும் நீர் தேங்கியுள்ள வயல் வரப்புகளிலும், சிறு குளங்கள், குட்டைகள், ஆற்றோரங்களில் அதிகம் வளர்ந்து வரும் தாவரம்.

இதில் முட்கள் இருக்கும். ஊதா நிறத்தில் அழகான பூக்களைக் கொண்டிருக்கும். இதன் இலை விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தில் நீர்முள்ளியின் பயன்பாடு அதிகம்.

இதனை நிதகம், இக்குரம், காகண்டம், தூரகத மூலம், முண்டகம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

உடல் சோர்வு நீங்கும்

மனச் சோர்வு ஏற்பட்டாலே உடல் சோர்வும் உண்டாகும். உடல் சோர்வுற்றால் எந்த ஒரு வேலையும் திறம்பட செய்ய இயலாமல் போகும். இத்தகைய உடற்சோர்வை புத்துணர்வு பெறச் செய்ய நீர்முள்ளி சமூலத்தை தினமும் கஷாயம் செய்து அருந்தி வரவேண்டும்.

சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்களுக்கு நீர்முள்ளி சிறந்த மருந்து. நீர்முள்ளி கசாயத்தை காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறும். மலக்கட்டை உடைத்து மலச்சிக்கலை போக்கும் குணம் நீர்முள்ளிக்கு உண்டு. நீர்முள்ளியுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து இடித்து பொடித்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் மலச்சிக்கல் நீங்கும். வாயுக்களின் சீற்றத்தினாலும் அஜீரணக் கோளாறினாலும் ஏற்படும் வயிற்றுப்புண் ஆற நீர்முள்ளி இலைகளை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.

தாது விருத்தியடைய

மன உளைச்சலாலும், உடல் சீர்கேட்டாலும் சிலருக்கு தாது நஷ்டம் ஏற்பட்டு விந்து சிறுநீருடன் வெளியேறும். இவர்கள் நீர்முள்ளி கஷாயத்தை அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். மாதவிலக்கு சீராக இல்லாத பெண்களும், வெள்ளைப்படுதல் போன்ற தொல்லைகள் உள்ள பெண்களும் நீர்முள்ளி கஷாயம் செய்து அருந்தி வந்தால் இத்தகைய தொல்லையிலிருந்து விடுபடலாம். நீர்முள்ளிச் செடியில் வீக்கம், பாண்டு, நீர்கட்டு, ஆரோசிகம், காமாலை, விஷபாண்டு, ஈரல்வீக்கம்,மண்ணீரல் வீக்கம் முதலிய நோய் போக்கும். நீர்முள்ளியை சமூலமாய் சுட்டு, சாம்பல் எடுத்துச் சிறுநீர் விட்டு கரைத்து வீக்கம் உள்ள பாகத்தில் மூன்று தினங்கள் தொடர்ந்து பூசிவர வீக்கம் வற்றிவிடும்.

விஷநீர் வடியும்

நீர்முள்ளிவிதை, வெள்ளரிவிதை, இவையிரண்டையும், சமமாக அரைத்து உள்ளுக்குள் சாப்பிட்டால் நீர் தாராளமாக போகும். உடம்பில் உள்ள விஷநீர் வடிந்து வீக்கம் வாடும்.

நீர்முள்ளிவிதை, முருங்கைவிதை, தாமரைவிதை, வெங்காயவிதை, இவைகளை சமபாகம் எடுத்து அரைத்து பாலில் கலந்துச் சாப்பிட தாது விருத்தியுண்டாகும். விந்து கட்டும். போகசக்தி பெருகும். வெள்ளைநீர், எரிச்சல், இவைகளுக்கு நல்ல பலன்தரும். நீர்முள்ளி விதையை தனியாகவும் அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால் மேற்கண்ட நோய்கள் அனைத்தும் குணமடையும்.

No comments:

Post a Comment